Temples & Other interesting Places
SANKARANARAYA SWAMY TEMPLE
கோவில் அமைப்பு
தலத்தின் அமைவிடம்
சங்கரன் கோவில் என்று கோவிலின் பெயரிலேயே அழைக்கப்படும் இவ்வூர், கிராம நாகரீகத்தோடு இன்றும் விளங்கி வருகிறது. இவ்வூர் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தாலுகா தலைநகராக விளங்கி வருகிறது. திருநெல்வேலியிலிருந்து 33 – மைல் தூரத்திலும் , கழுகுமலையிலிருந்து 12- வது மைலிலும் , இராசபாளையத்திலிருந்து 20 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. நல்ல போக்குவரத்து வசதியுள்ள தார் சாலைகளும், இவ்வூரில் புகைவண்டி நிலையமும் அமைந்துள்ளன. இது சென்னை – செங்கோட்டை .இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு பூகைலாயம் , புன்னைவனம் , சீராசபுரம் போன்ற இதர பெயர்களும் உண்டு. இது ஐம்பூதத் தலங்களில் ஒன்று. இது மண் தலமாகும். இதர 4 தலங்கள் தாருகாபுரம், தென்மலை , கரிவலம்வந்தநல்லூர் , தேவதானம் ஆகியவை இவ்வூருக்கு அருகிலேயே அமைந்துள்ளன. இவ்வைந்து தலங்களில் இதுவே முதன்மையானதாகும் . இன்றும் சில பக்தர்கள் சிவராத்திரியன்று இவ்வைந்து கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வருகிறார்கள்.
SANKARANARAYANASWAMY-GOMATHIAMMAN
சங்கரலிங்கர் கோவில் போன்றே கோமதியம்மன் கோவிலிலும், கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம் , அந்தராள மண்டபம் , மா மண்டபம் சுற்று மண்டபங்கள் உள்ளன. கோமதியம்மை கர்ப்பக்கிரகத்திற்கு நேர் எதிரில் ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன் மேல் மக்கள் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்கிறார்கள். இருபக்கமும் மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.வடக்குப் பிரகாரத்தில் புற்றுமண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் இம்மண்ணை வீட்டிற்கு எடுத்துச் சென்று நோய் நீக்கம் பெறுகிறார்கள். இது தோல் நோய்களை நீக்கும் அருமையான மருந்தாகும். அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்து கோமதி அம்மையைத் தரிசிக்கிறோம் .வலது கையில் மலர்ச் செண்டுடன் இடது கையைத் தொங்கவிட்டு ஒரு பக்கமாக சாய்ந்து நிற்கும் அழகு திருக்கோலம் நம் மனதை விட்டு என்றும் நீங்குவதில்லை . இக்கோவிலில்லிருந்து வெளிவந்தால் ஈசான திக்கில் சண்முகர் கோவிலும் வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீ நடராஜர் சந்நிதியும் உள்ளன.
புராண வரலாறு
சிவனிடத்தில் உமா தேவியார் , சங்கர நாராயணன் திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என்று பிரார்த்திக்க , இவ்விடம் சென்று தவம் செய்ய சிவனும் ஆணையிட்டார். உமா தேவியாரும் இவ்விடம் வர உடன் வந்த தேவர்கள் புண்ணை மர விருட்சங்களாகவும் , உடன் வந்த தெய்வ பெண்கள் பசுக்களாகவும் , உடன் வந்த முனிவர்கள் ஆதி சைவர்களான பட்டமார்களாகவும் மாற, இத்தலத்தில் உமா தேவியார் நெடுங்காலம் தவம் செய்து அருளினார். சிவபெருமானும் , இப்புன்னைவன சேத்திரமடைந்து ஒரு ஆடி மாதம் பௌர்ணமியன்று உமா தேவியாருக்கு சங்கர நாராயணராகத் திருக்காட்சி கொடுத்தார். உமா தேவியார் திரும்பவும் வேண்டிக் கொள்ள , சிவபெருமான் , சிவலிங்க வடிவமாகக் காட்சி கொடுத்து , இப்புன்னை வனத்திலேயே உமா தேவியாருடன் நிரந்தரமாக தங்கியருளினார்.
ஆடித்தபசுத் திருவிழா
இக்கோவிலில் சித்திரைத் திருவிழா, ஆடித்தபசு காட்சித் திருவிழா , வசந்த விழா , மார்கழி திருவாதிரைத் திருவிழா , தைப்பூசத் திருவிழா ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெற்றாலும் ஆடித் தபசுத் திருவிழா, திருநெல்வேலி மாவட்டத்திலேயே நிகழும் பெருந் திருவிழாக்களில் ஒன்றாகும். புன்னை வனத்தில் கோமதி அம்பாள் முதல் 10 நாள் தபசு இருக்கிறாள்.ஆடித்தபசு அன்று மாலை இறைவன் தெற்கு ரத வீதியில் தேவியாருக்கு சங்கர நாராயணர் திருக் கோலத்தைக் காட்டி அருளுகிறார். பின்னர் அன்று இரவில் இறைவன் சங்கரலிங்கமாகக் காட்சி அருளுகிறார். இதுவே ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். இது 11 -ஆம் நாள் நடைபெறுவதாகும்.
அரன் தான் பெரியவன் , அரி தான் பெரியவன் என்று வாதிட்ட சங்கன், பதுமன் என்ற இரு நாகர்களுக்காக இறைவன், அரனின் கூறு தான் அரி என்ற பெருமையை உணாத்தியதாகவும் கூறுவர். இறைவன் தன்னுள்ளடங்கிய நாராயணனை வெளிப்படையாக இங்கு தனது இடது பாகத்தில் காட்டியருளினார்.
தினசரிபூஜை
இக்கோவிலில் தினசரி 7 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
தீர்த்தங்கள்
இக்கோவிலைச் சார்ந்த தீர்த்தங்கள் பல இருப்பினும் கோவிலுக்குள்ளேயே , கோமதியம்மை கர்ப்பக்கிருகத்திற்கு எதிரில் அமைந்துள்ள நாகசுனை என்பது சங்கன், பதுமன் என்னும் பாம்பு அரசர்களால் கட்டப்பட்டதாகும். இத்தீர்த்தம் காற்றைப் புசிக்கின்ற பாம்புகளால் கட்டப்பட்டதால் , நண்டு, ஆமை, தவளை, மீன் முதலிய நீரில் வாழும் உயிர்கள் இக்குளத்தில் வசிப்பதில்லை.
தலமரம்
இத்தலம் ஆதியில் புன்னைவனமாக இருந்ததால் , புன்னையே தலமரமாகும். கோவில் மேற்குப் பிரகாரத்தில் ஒரு மரம் உள்ளது.
கோவில் உருவாகிய வரலாறு
ஆதியில் இத்தலத்திற்கு வடக்கில் 7 மைல் தூரத்திலுள்ள கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் ஸ்வாமி கோவிலுக்குச் சொந்தமாக புன்னைவனத்தில் இவ்விடத்தில் ஒரு பூந்தோட்டம் இருந்தது. இத்தோட்டத்திற்கு காவல் இருந்த காவற்பறையன் என்பவன் அங்கிருந்த புற்று ஒன்றை வெட்ட, அதிலிருந்த ஓரூ பாம்பின் வால் வெட்டப்பட்டு அதன் அருகில் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். திருநெல்வேலி அருகில் மணலூரில் அரசாண்டு வந்த உக்கிர பாண்டியர் என்ற மன்னரிடம் , காவற்பறையன் இதைத் தெரிவித்தான். மன்னனும் , அவனுடன் சென்று புற்றினையும் , புற்றிடங்கொண்டாரையும் , வால் வெட்டுப்பட்ட பாம்பினையும் கண்ட போது , இறைவன் அசரீரி மூலம் ஆணை தர, மன்னனும் அவ்விடத்தில் கோவில் கட்டி சங்கரன் கோவில் ஊரை உருவாக்கினார். காவற்பறையான் மற்றும் இம்மன்னனின் திருவுருவங்களை இக்கோவில் தூண்களில் காணலாம். அப்பொழுது கரிவலம் வந்த நல்லூரை அரசாண்டு வந்த பிரகத்துவச பாண்டியன் என்பவனும் இக்கோவிலை பெரியதாக்கி திருப்பணி செய்தான்.தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுகளிலிருந்து உக்கிர`பாண்டியனமன்னன் இக்கோவிலைச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டியதாகத் தெரிகிறது.
சமய ஒற்றுமை
இக்கோவிலில் சங்கரனார் மற்றும் கோமதியம்மைக்கு மட்டுமே இரண்டு சந்நிதிகள் , தெருவிலிருந்து நேரே தரிசிக்குமாறு இரண்டு பெரும் வாயில்களுடன் அமைந்துள்ளது. ஆனால் நடுவில் உள்ள சங்கர நாராயணருக்கு தலைவாசல் ஒன்று இல்லாதபடி உள்ளடங்கியே உள்ளது. மேலும் அம்மையின் வேண்டுதல் படி இறைவன் சங்கரநாராயணராகக் காட்சி கொடுத்தமையால் சங்கரநாராயணர்த் திருக்கோவில் பின்னால் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருத இடமுள்ளது. வைணவப் பெரியார் இராமானுசர் மற்றும் வீர வைணவர்களான விஜயநகர மன்னர்கள் காலத்திலும், .திருமாலுக்கு இக்கோவிலோடு தொடர்பினை உண்டாக்கி இரண்டு பெருந் தெய்வங்களும் இணைந்ததே சங்கரநாராயணர் என்று உருவாக்கிவிட்டனர் என்பர்.
பரமேஸ்வரன் தன்னுள் அடங்கிய நாராயணரை வெளிப்படையாகத் தனது இடது பாகத்தில் காட்டி அருளினாரா ? அல்லது சிவன், திருமால் என்ற இரண்டு பெருந் தெய்வங்களும் இணைந்ததால் சங்கரநாராயணரா ? எது எப்படியிருப்பினும் , தற்காலத்திற்கு மிகவும் அவசியமான சமய ஒற்றுமைக்கு இக்கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி மக்களை நல்வழிப்படுத்தி வருகிறது. என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை . தமிழ்நாட்டில் சங்கரநாராயணருக்கு தனிக்கோவிலாக அமைந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் ஒரே திருக்கோவில் இதுவேயாகும்.
பிரார்த்தனைத் தலம்
இத்தலம் தென் கிழக்கு தமிழக மக்களின் ஒரு பிரார்த்தனை தலம் ஆகும். பாம்பு , தேள் போன்ற சிறு விஷ ஜந்துக்களிலிருந்து நமக்கு துன்பம் வராதிருக்க பிராணிகளின் வெள்ளியிலான உருவங்களை வாங்கி உண்டியலில் செலுத்துவர். இங்கு கிடைக்கும் புற்று மண்ணைக் கரைத்துப் பூசினால் தோல் வியாதிகள் நீங்குவது யாவரும் அறிந்ததே. இத்தலத்திற்கு வந்து நாகசுனையில் மூழ்கி முறையாக வழிபடுவோர் குட்டம் , குன்மம் முதலிய தீராத நோய்களிலிருந்து விடுபட்டு நலம் பெறுகின்றனர்.
சங்கரன்கோவில் செல்வோம் ! சங்கரலிங்க ஸ்வாமியையும் , கோமதி அம்மையையும், சங்கரநாராயணரையும் வணங்கி நலம் பல பெறுவோம்!