எங்களை பற்றி

வரலாறு

 

கி.பி 1714ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தனக்கு கப்பம் கட்ட மறுத்த செஞ்சியின் மன்னர் ராஜா ஜெய்சிங் என்ற தேசிங்கு மீது ஆற்காடு நவாப் சாதத்துல்லாக்கான் போர் தொடுத்தார்.இப்போரில் ராஜா தேசிங்கு வீர மரணமடைந்தார். இத்துயர செய்தியை கேட்ட ராஜா தேசிங்கின் மனைவியான ராணிபாய் உடன் கட்டை ஏறி தன் உயிரையும் நீத்தார்.இதனால் இவர்கள் இருவரின் தியாகத்தை மெச்சிய ஆற்காடு நவாப் சாதத்துல்லாகான், ராஜா தேசிங்கு மற்றும் அவரது மனைவியான ராணிபாய் ஆகிய இருவருக்கும் ராணிப்பேட்டை பாலாற்றங்கரை ஓரத்தில் பளிங்கு கற்களால் ஆன இரு நினைவுச் சின்னங்களை எழுப்பினார். அத்துடன் தேசிங்கு ராஜனின் மனைவியின் கற்புத்திறனை பறைசாற்றும் விதமாக ராணிப்பேட்டை என்ற நகரை 1771 ஆம் ஆண்டு நிர்மாணித்தார். ராஜா தேசிங்கின் மனைவி ராணிபாய் நினைவாகத்தான் கடந்த 308ஆண்டுகளாக ராணிப்பேட்டை என பெயர் வந்ததற்கான காரணமாக இருந்ததாக தெரியவருகிறது.
ஐரோப்பிய பாசறை நிறுவப்பட்டதிலிருந்து இந்த நகரம் முக்கியத்துவம் பெற்றது. இராணிப்பேட்டைக்கு மேற்கில் ஒரு மைல் தொலைவில் பாலாற்றங்கரையை ஒட்டினாற்போல் 4.8 கி.மீ பரப்பில் ”நவ்லாக் பண்ணை” என்ற தோப்பு உள்ளது. இத்தோப்பில் 9 லட்சம் மரங்கள் உள்ளதாக அறியப்படுகிறது.
இப்படி புகழ்வாய்ந்த ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் 2019 வருடம், ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சுதந்திர தினத்தன்று அறிவித்தார். இதன் தொடக்க விழாவை 2019 வருடம், நவம்பர் 28ம் தேதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் துவக்கி வைத்தார். 29.11.2019 முதற்கொண்டு 36வது மாவட்டமாக இப்புதிய மாவட்டம் இயங்க ஆரம்பித்தது.

இராணிப்பேட்டை நகராட்சி  01.04.1959 தேதியிட்ட அரசானை எண் 724 இன் படி இராணிப்பேட்டை நகராட்சி 01.04.1959 அன்று அமைக்கப்பட்டது.

இராணிப்பேட்டை நகராட்சி 05.10.1978 முதல் அரசானை எண் 1546 ன் படி இரண்டாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. பின்னர், 22.05.1998 முதல் அரசானை எண் 85 ன் படி இராணிப்பேட்டை நகராட்சி முதல் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது.

அரசானை எண் 238, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 22.11.2008 தேதியிட்ட ஆணையின் படி இராணிப்பேட்டை நகராட்சி தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

இராணிப்பேட்டை நகராட்சியின் பரப்பளவு 8.52 சதுர கிலோமீட்டராகவும் மற்றும் நகர எல்லைக்குள் 30 வார்டுகளை உள்ளடக்கி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50764 எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்ட தேர்வுநிலை நகராட்சியாகும்