எங்களை பற்றி

நகரத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சி

இராமேசுவரத்தின் வரலாறு இராமநாதசுவாமி கோவிலையும் இலங்கை செல்வதற்கான வாயிலாக இருந்ததையும் மையமாக கொண்டுள்ளது. சோழ மன்னர் இராசேந்திர சோழன் (1012–1040 CE) ஆட்சியில் சிலகாலம் இராமேசுவரம் இருந்து வந்துள்ளது.[7] 1215–1624 CE காலப்பகுதியில் யாழ்ப்பாண அரசு கட்டுப்பாட்டில் இத்தீவு இருந்தது; யாழ்ப்பாண அரசர் சேதுகாவலன் என அழைக்கப்பட்டார். [8] இந்து சமய மன்னர்களான அவர்களது ஆட்சியில் கோவிலை வளப்படுத்தினர்.[8] அவர்களது காசுகளிலும் இலச்சினைகளிலும் சேது என்ற அடையாளம் பயன்படுத்தப்பட்டு வந்தது.[8]

பதினான்காம் நூற்றாண்டில் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைத்தளபதி மாலிக் கபூர் பாண்டியர்களின் எதிர்ப்பை முறியடித்து இங்கு வந்தடைந்தார். [9][10][11] இசுலாத்தின் வெற்றியை நினைவுகூறுமுகமாக அலியா அல்-தின் கல்ட்ஜி என்ற மசூதியை நிறுவினார்.[9][10] பதினைந்தாவது நூற்றாண்டின் முற்பகுதியில் தற்கால இராமநாதபுரம், கமுதி, இராமேசுவரம் பகுதிகள் பாண்டிய இராச்சியத்தின் கீழ் இருந்தன.[7] கிபி 1520 இல், விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் வந்தது.[7] மதுரை நாயக்கர்களிடமிருந்து பிரிந்த சேதுபதிகள் இராமநாதபுரத்தை ஆளத் தொடங்கினர். இவர்கள் இராமநாதசுவாமி கோவிலின் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவினர்.[7][5] முக்கியமாக முத்துக் குமார ரகுநாத சேதுபதியும் முத்து ராமலிங்க சேதுபதியும் கோவிலின் கட்டிட வடிவமைப்பை மிகச்சிறப்பான கட்டிடக்கலையாக அமைத்தனர்.[12] 18வது நூற்றாண்டில் இப்பகுதி அடுத்தடுத்து பலமுறை சந்தா சாகிப் (1740–1754), ஆற்காடு நவாப்மருதநாயகம் (1725–1764) ஆகியோரால் கையகப்படுத்தப்பட்டது.[13] கிபி 1795யில் இராமேசுவரம் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது. சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1947க்குப் பிறகு சுதந்திர இந்தியாவின் பகுதியாயிற்று.