காண வேண்டிய இடங்கள்

காண வேண்டிய இடங்கள்

  1. நாகராஜா கோவில்

நாகராஜா கோவில் என்பது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் உள்ளது. இக்கோயிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது. இது கேரள பாரம்பரியக் கோவில் ஆகும். இங்கு மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலைச் சுற்றி ஏராளமான பாம்புச் சிலைகள் உள்ளன. பொதுமக்கள் ஆவணிமாதத்தில் இச்சிலைகளுக்குப் பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.[1]

இக்கோவிலின் கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது. இது வேறு எந்தக் கோவிலிலும் பார்க்கமுடியாத சிறப்பு அம்சமாகும். அது மட்டுமல்ல இந்தக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் கருப்பாகவும் ஆறு மாதம் வெண்மையாகவும் காணப்படுகிறது. இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. [2]

இக்கோவிலில் அருள்பாலிக்கும் பாலமுருகனுக்கு ஆண்டு தோறும் சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரன் பாடும் நடைபெறுகிறது.

  1. கோட்டார் புனித சவேரியார் ஆலயம்

குமரி மாவட்ட தலைநகரமான நாகர்கோவில் நகரின் மைய பகுதியான கோட்டாரில் அமைந்துள்ளது சவேரியார் ஆலயம். சவேரியார் திருப்பலி நடத்தியதால் அவரது பெயரை தாங்கி நிற்கும் இந்த ஆலயத்துக்கு சாதி, மத வேறுபாடு பார்க்காமல் அனைத்து சமுதாய மக்களும் வந்து செல்கின்றனர். அப்படி வந்து செல்வோர் தங்களது வேண்டுதல்படி நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளனர்.

உலகிலேயே சவேரியாருக்கு முதன்முதலாக ஆலயம் எழுப்பப்பட்டது குமரி மாவட்டம் கோட்டாரில்தான். கோவாவுக்கு அடுத்தபடியாக இங்குள்ள சவேரியார் ஆலயம்தான் இந்தியாவில் புகழ் பெற்ற ஆலயமாக உள்ளது இன்னும் சிறப்புக்குரியது.

3.பேச்சிப்பாறை அணை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணையாகும். இது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பேச்சிப்பாறை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இது தக்கலை நகரிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ் அணை கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1897-1906 காலகட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு மிஞ்சின் அவர்களால் அப்போதைய திருவிதாங்கூர் மகாராசா மூலம் திருநாள் காலத்தில் கட்டப்பட்டது.இதன் அப்போதைய கட்டுமானத்திற்காக செலவளிக்கப்பட்ட தொகை 26.1 லட்சம். இவ்வணை கன்னியாகுமரி மாவட்டத்தின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றது. இவ்வணை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டிமுடிக்கப்பட்டது. கல்குளம், அகத்தீசுவரம், தோவாளை மற்றும் ராதாபுரம் ஆகிய வட்டங்கள் இதன் மூலம் பலன் பெறுகின்றன. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி பெறுகின்றது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 207.19 சதுர கிலோமீட்டர்கள் ஆழம் 14.6 மீட்டர்கள் ( 48 அடி). அணையின் நீளம் 425.5 மீட்டர்கள் உயரம் 120.7 மீட்டர்கள் .இங்கு பேச்சியம்மன் பெயாில் சிறு கோயில் ஒன்று கட்டப்பட்டு தெய்வ வழிபாடும் நடைபெற்று வருகிறது.

4.உதயகிரிக் கோட்டை

உதயகிரிக் கோட்டை  தொடக்கத்தில் கி.பி 1600 களில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் பத்மநாபபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு திருவிதாங்கூர் அரசர்கள் ஆண்ட காலத்தில் இக் கோட்டை அவர்களுக்குப் பெரிய சொத்தாக அமைந்திருந்தது. இது பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மரால் மீளக் கட்டப்பட்டது.

90 ஏக்கர் (36 ஹெக்டேர்) பரப்பளவை உள்ளடக்கியுள்ள இக் கோட்டையுள் 200 அடி (79 மீட்டர்) உயரமுள்ள ஒரு குன்று உள்ளது. இதற்குள் துப்பாக்கிகளை வார்ப்பதற்கான வார்ப்பு உலை ஒன்றும் உண்டு.

உதயகிரிக் கோட்டையுள் காணப்படும் டி லனோயின் சமாதி.

டச்சு அட்மிரலான இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் (Eustachius De Lannoy) என்பவரது அவரது மனைவி, மகன் ஆகியோரதும் சமாதிகள் இங்குள்ள பகுதி அழிந்த நிலையில் காணப்படும் ஒரு கிறிஸ்தவ சிற்றாலயத்துள் உள்ளன. ஒரு காலத்தில் இக் கோட்டை இவரது பெயரைத் தழுவி தில்லானைக் கோட்டை (டி லனோய்ஸ் கோட்டை – De Lennoy’s Fort) என அழைக்கப்பட்டு வந்தது.

இக்கோட்டை, திருவனந்தபுரம் – நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புலியூர்க்குறிச்சியில் உள்ளது. பத்மநாபபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திருவிதாங்கூர் அரசர்களின் மிக முக்கியமான படைநிலை இதுவேயாகும். இக்கோட்டை பாரிய கருங்கற்களால் ஒரு தனியான குன்றைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளது.

 

5.திற்பரப்பு அருவி

திற்பரப்பு நீர்வீழ்ச்சி 25 கி.மீ தூரத்திலுள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5கீ.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது. தக்கனின் வேள்வியை கலைத்தபிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு அமைந்திருப்பதாக இந்து சமய நம்பிக்கை உள்ளது. கீழ்பகுதி வட்டமாகவும் மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இவ்விடம் திகழ்கிறது

6.முட்டம்

முட்டம் 25 கி.மீ தூரத்தில்  அமைந்துள்ள ஊராகும். அழகிய கடற்கரையைக் கொண்டிருப்பதால் இவ்வூர் சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. மீன்பிடித்தல் முதன்மைத் தொழிலாகும். பழைமையான சகல புனிதர் கத்தோலிக்க ஆலயமும், பழமையான கலங்கரை விளக்கமும் இங்குள்ளன.

7.கன்னியாகுமரி

இம்மாவட்டமானது இவ்வுரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணைகின்றன. இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு உலகப் புகழ் சுற்றுலாத் தலமாகும்.  இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133-அடி திருவள்ளுவர் சிலை ஆகியவை புகழ்பெற்றவை. அத்துடன் புகழ்வாய்ந்த வரலாற்று சிறப்புமிகு குமரியம்மன் (பார்வதி) கோவில் அமைந்துள்ளது, கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளுடைய சாம்பல் (அஸ்தி) கரைக்கப்பட்டது. காந்தியடிகள், காமராஜரின் நினைவு மண்டபம் கன்னியாகுமரியில் உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆகும்.

8.சுசீந்திரம்

நாகர்கோவில்- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் தக்கலையிலிருந்து கிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் உள்ளது. இக்கோவில் வரலாற்று சிறப்புமிகு வாய்ந்ததாகவும், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் அமைந்துள்ளது.