காண வேண்டிய இடங்கள்
கோயில்கள் மற்றும் பிற சுவாரஸ்யமான இடங்கள்
- ஸ்ரீ தன்னாசியப்பர் கோயில்
ஸ்ரீ தன்னாசியப்பர் கோயில் கோவை – மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து மேற்கே 5 கி.மீ. தொலைவில் செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ளது. தன்னாசியப்பர் கோவை–பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த செல்வபுரத்திலும் ஜீவ ஐக்கியம் பெற்று உள்ளார். கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆளரவமே இல்லாத இந்த மலைக்கு அருகே உள்ள சிறிய குகையில் தன்னாசி அப்பர் எனும் சித்தர் ஒருவர் வசித்து வந்தார். இவர் தினமும் மலையடிவாரத்தில் இருந்த ஆலமரத்திற்கு கீழ் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். அப்பகுதியில் கால்நடை மேய்ப்போர் இவரிடம் பழகி வந்தனர். யாரிடமும் அதிகம் பேசாமல் அடிக்கடி நிஷ்டையில் இருந்த இவரின் முகத்தில் இருந்த தேஜஸக் கண்டு பின்னாளில் வணங்க ஆரம்பித்தனர். அத்துடன் தமக்கு வந்த கஷ்டங்களை சொல்லி அதனை போக்கவும் வேண்டினர். அவர் அருளாசி வழங்கியதால் நோய்கள் பறந்தோடின. இதனால் சித்தரின் புகழ் மற்ற கிராமங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.
இந்நிலையில் ஒருநாள் குகைக்குள் சென்றவர் மீண்டும் வெளியில் வரவேயில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற மக்கள் அவரின் வரவிற்காகக் காத்திருந்தனர். குகைக்குள் செல்லவும் பயம். ஆனால் இறுதிவரை அவர் வெளியில் வரவே இல்லை. பெரும்பாலும் வெகு அமைதியாக வனவிலங்குகள் சுற்றித் திரிந்த அந்த பகுதியில் அவரை வணங்கக் காத்திருந்தவர்கள் அவர் வராமல் போகவே வருத்தமடைந்தனர். அவர் தவம் செய்த ஆலமரத்திற்கு கீழ் சிலை வைத்து அவரை வணங்க ஆரம்பித்தனர். பிற்காலத்தில் பலர் தங்கள் நோய் தீர அங்கேயே தங்கி வணங்கினர். வனவிலங்குகள் அதிகமிருந்ததால் ஆண்டிற்கொரு முறை மட்டும் அங்கு விழா நடத்திக் கொண்டாடினர். தற்போது பல்வேறு பக்தர்களின் பணியினால் இன்று மிகப் பெரிய ஆலயமாகத் திகழும் இக்கோயிலில் இரு வேளை பூஜை நடக்கிறது.
2. பாலமலை அரங்கநாதர் கோயில்
பாலமலை அரங்கநாதர் திருக்கோவில் கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் பெரியநாயக்கன்பாளையத்திலிருந்து மேற்கே 5 கி.மீ. மற்றும் மலை வழித்தடத்தில் 1.5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் பாலமலை அரங்கநாதர் சன்னதியும், செங்கோதையம்மன், பூங்கோதையம்மன், விநாயகர், ராமானுஜர், பரமவாசுதேவர், காளிதாசர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சித்திரைவிழா, சித்ராபௌர்ணமி, முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகள் திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் பெருமாள்தேர் தேரோட்டம் நடைபெறுகிறது. சித்திரை மாதம் சித்திரைவிழா தெப்பம் திருவிழாவாக நடைபெறுகிறது.